IPL5 CSK vs RCB - சிங்க கர்ஜனையில் சிதறிய ராயல்

இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற CSK-RCB ஆட்டத்தின் முதல் இன்னிங்க்ஸை வேலை காரணமாக டிவியில் பார்க்க இயலவில்லை. அதுவும் நல்லதுக்கு தான். கிரிக் இன்ஃபோ தளத்தில் RCB ஸ்கோர் எகிறிக் கொண்டிருந்தது! கெய்லை டம்மியாக்கி விட்டு ஊர் பேர் தெரியாத அகர்வால் சென்னை பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 53 (5.2). அகர்வால் எடுத்தது 45, கெய்ல் 7. அஷ்வின் பந்து வீச்சு இப்படி துவைத்து எடுக்கப்பட்டு பார்த்ததில்லை. 3 ஓவர்களில் 34 ரன்கள் தாரை வார்த்திருந்தார்.
அகர்வால் சென்ற பின், கெய்லுக்கு கொல வெறி பிடித்து, ரெய்னாவின் ஒரு ஓவரில் 21 ரன்கள். 9 ஓவர்களில் 90 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு. கோலிக்கும் சீக்கிரம் வெறி பிடிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தன :) ஒரு வழியாக கெய்லின் பேயாட்டம் ஓய்ந்தபோது ஸ்கோர் 162/2 (16.2). இந்த ரன் மழையிலும், பிரேவோவும் மார்க்கலும் நன்றாகவே பந்து வீசினார். பாலிங்கர் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்ததில் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ஒரு 10-12 ரன்கள் காப்பாற்றப் பட்டதாக கொள்ளலாம். பங்களூர் மொத்த ஸ்கோர் 205.
நிச்சயம் சென்னைக்கு தோல்வி என்ற முடிவோடு (அப்ப தான் வழக்கமான நம்ம ரென்ஷன் இல்லாம பார்க்க முடியும்!) டிவி பார்க்க ஆரம்பித்தேன். நிதானமாக தொடங்கிய டுபிளஸ்ஸி ஆட்டம் களை கட்ட ஆரம்பித்தது. உருப்படாத மொ.க முரளி விஜய் மொக்கை போட்டு 11 ரன்களில் அவுட்டானதும் நல்லதுக்கு தான். அடுத்து வந்த சென்னையின் Man for all seasons, ரெய்னா (23 of 14) அவுட்டானபோது ஸ்கோர் 88 (10.3). தோல்வியை எதிர்பார்த்து, ரிலேக்ஸ்டாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோனி 2 டவுன் களமிறங்கியது நல்ல மூவ்! தோனி 7-8 "ஹெலிகாப்டர்கள்" விட்டாலொழிய ஜெயிக்க வாய்ப்பே கிடையாது! அருமையாக ஆடி, 46 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த டுபிளஸ்ஸி 15வது ஓவரில் அவுட்டானபோது RR 14.2. முரளி தனது அற்புதமான ஸ்பெல்லில் 21 ரன்களே கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிட வேண்டியது. அந்த சூழலில், வெற்றிக்கு வாய்ப்பு 30% என்று சொல்லும்படி தான் இருந்தது.
தோனியின் “ஹெலிகாப்டர்கள்” சரியாக பறக்காததால், தேவையான ரன்ரேட் ஏறுமுகமாகவே இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை (RR 16.66). சென்னை வெற்றி பெறும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லாததால், ஒருத்தருக்கும் (அரங்கில் பார்வையாளர்கள், சென்னை அணி) டென்ஷன் இல்லாத மாதிரி நான் உணர்ந்தேன்! அந்த 18வது ஓவரில், சாகீரின் அனுபவம் மிளிர்ந்தது. 7-ஏ ரன்கள் கொடுத்து, ஓவரின் கடைசி பந்தில், தோனியின் கடைசி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினார். இறுதி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு 10% ஆனது!
உடல் நிலை சரியில்லாத கெய்ல் ஆடுகளத்தில் இல்லை. பத்கல் ஏற்கனவே துவைக்கப்படிருந்த (2 ஓவர்கள், 35 ரன்கள்) காரணத்தால், முக்கியமான 19வது ஓவரை வீச, வெட்டோரி பகுதி நேர பந்து வீச்சாளரான கோலியை அழைத்தது, தூங்கிக் கொண்டிருந்த (மார்க்கல்) சிங்கத்தை வாலைக்கடித்து எழுப்பிய கதையானது! 2 ஓசி பவுண்டரிகள் கிட்டியிருந்தாலும், மார்க்கல் அடித்த மற்ற 3 சிக்ஸர்கள் மிக “சுத்தமான” விளாசல்கள்! அந்த 28-ரன் ஓவர் கோபக்கார கோலிக்கு போதி மரம் போல! ஓவரின் முடிவில், “நல்லாத் தானே போயிட்டிருந்தது” வடிவேலுவை கோலி ஞாபகப்படுத்தினார் :) இனி, அடுத்த 5 ஆட்டங்களுக்கு, பந்து வீச கோலிக்கு கை வராது என்று நினைக்கிறேன்! பேட்டிகளில் சற்று லூசுத்தனமாக உளறும் சித்தார்த்த மால்யா சித்தபிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது!
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. ஒரு No Ball தவிர்த்து அந்த ஓவரை வினய் (அழுத்தத்திற்கு ஆளாகாமல்) சிறப்பாகவே வீசினார் என்பது என் கருத்து. மார்க்கல் விக்கெட் இழந்தும், முதல் 3 பந்துகளில் 12 ரன்கள்! 4வது ஒரு Dot Ball. 5வதில் ஒரு ரன் மட்டுமே! 6வது edge வாங்கி பவுண்டரிக்கு பறந்ததில், சென்னைக்கு ஐபிஎல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றி !!!! இப்படியாக ஆட்டத்தின் 37 ஓவர்களில் (பாலிங்கர் வீசிய கடைசி ஓவரையும், சென்னை பேட் செய்த கடைசி 2 ஓவர்களையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த சென்னை அணி ஓர் அசாதாரண வெற்றியைப் பெற்றது.
எ.அ.பாலா
1 மறுமொழிகள்:
Test Comment, as usual :)
Post a Comment